ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் மீனவர்களின் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் மீனவர்களின் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்ே்பாது ராமேசுவரம் மீனவர்களை, அங்கு கப்பல் ஒன்றில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
இதில் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை, ரோந்து கப்பலை வைத்து அந்த படகின் மீது மோதியதில் படகு சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சேதமடைந்த படகுடன் மீனவர்கள் நேற்று காலை திரும்பினார்கள்.
எதிர்பாராமல் நடந்ததா?
இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்களிடம் கியூ பிரிவு, உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது கப்பல் ஒன்றில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன் கேட்டதாகவும், மீன்களை கொடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ரோந்து கப்பல் படகில் மோதி லேசான சேதம் அடைத்ததாகவும் இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து படகு உரிமையாளர் மீன்துறை அலுவலகத்திலோ மற்றும் கடலோர காவல் நிலையத்திலும் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.