அரசு வழங்கிய நிவாரண தொகை ரூ.8 லட்சம் அபகரிப்பு; கலெக்டரிடம் தொழிலாளி புகார்
அரசு வழங்கிய நிவாரண தொகை ரூ.8 லட்சம் அபகரிப்பு; கலெக்டரிடம் தொழிலாளி புகார்
ஈரோடு பி.பி. அக்ரஹாரம் தர்கா வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஜாகீர் உசேன் (வயது 45). இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். தொடர் மழை காரணமாக கடந்த 2-ந்தேதி ஜாகீர் உசேனின் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவருடைய மனைவி சாரம்மா, மகன் முகமது அஸ்தக் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி, மகனை இழந்த ஜாகீர் உசேனுக்கு, தமிழ்நாடு அரசு நிவாரண தொகையாக ரூ.8 லட்சத்தை வழங்க முடிவு செய்தது. ஜாகீர் உசேனுக்கு வங்கி கணக்கு இல்லாததால், அவரது மகள் சனா பர்வீனின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில் அரசின் நிவாரண தொகை வங்கியில் செலுத்தப்பட்ட உடன், சனா பர்வீன், அவருடைய கணவர் அல்லா பாக்ஸ் என்கிற சதாம், மைத்துனர் அக்கீம் ஆகியோர் முழுமையாக அபகரித்து விட்டதாக கடந்த 12-ந்தேதி ஜாகீர் உசேன் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஜாகீர் உசேன் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர், 'அரசின் நிவாரண தொகை எனது மகள் வங்கி கணக்கிற்கு வந்ததும், மருமகன், மைத்துனர் ஆகியோர் சூழ்ச்சி செய்து முழுமையாக அபகரித்து விட்டனர். அரசு நிவாரண தொகை குறித்து கேட்டபோது என்னை தகாத வார்த்தையால் திட்டி, அவமானப்படுத்தி வெளியேற்றி விட்டனர். அரசின் நிவாரண தொகையை முழுமையாக அபகரிக்கும் நோக்கத்தோடு, எனது மனைவி உயிரோடு இருந்தபோது கடன் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து காட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அரசின் நிவாரண தொகையை மீட்டு தர வேண்டும்' என்று கூறி இருந்தார்.