அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு


அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு
x
தினத்தந்தி 9 July 2023 12:51 AM IST (Updated: 9 July 2023 5:50 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நிலம் அபகரிப்பு

சென்னை அடையார் கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர் ரமா கார்த்திகேயன். இவர் திருச்சி தென்னூரில் உள்ள பழனிசாமி பிள்ளை அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கிறார். இந்தநிலையில் இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட புங்கனூர் கிராமத்தில் 1 ஏக்கர் 75 சென்ட் நிலம் பழனிசாமி பிள்ளை அறக்கட்டளைக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ஆகும். இந்த நிலத்தை புங்கனூரை சேர்ந்த நபர்கள் குத்தகைக்கு எடுத்து இருந்தனர். இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களான நாங்கள் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

ஊராட்சி ஊழியர் கைது

இதை பயன்படுத்திக்கொண்டு, சிலர் புங்கனூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றிய ராஜேந்திரன் என்பவரை சொத்தின் உரிமையாளர் மகன் போல சித்தரித்து அவரது பெயர் வெங்கடாசலம் என்று மாற்றம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெயரில் போலி ஆதார் கார்டு மற்றும் சொத்தின் உரிமையாளர் இறந்ததற்கு போலி இறப்பு சான்றிதழ், போலி வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை தயார் செய்து திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பத்திரத்தை ஆள்மாறாட்டம் செய்து செந்தில்குமார் என்பவரது பெயருக்கு பதிவு செய்து நிலத்தை அபகரித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு மூலகாரணமாக இருந்த செந்தில்குமார் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story