முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள்


முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள்
x

வேலூர் கொணவட்டம் அரசுப்பள்ளி முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் இருந்ததை கண்டு தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் அதிர்ச்சி அடைந்தார்.

வேலூர்

முதலுதவி பெட்டி

தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன்கோயல் வேலூர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தொடர்பான பதிவேடுகள், புகார் பெட்டியில் மாணவர்கள் அளித்த புகார் மனுக்கள் மற்றும் முதலுதவி பெட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலுதவி பெட்டியில் இருந்த சில மாத்திரைகள் மற்றும் டிஞ்சர், டெட்டால் உள்ளிட்ட மருந்துகள் காலாவதியாகி இருந்தன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இவற்றை சரியாக ஏன் பராமரிக்கவில்லை என்று தலைமையாசிரியரையும், பள்ளிக்கு வரும்போது முதலுதவி பெட்டியை ஏன் ஆய்வு செய்யவில்லை என்று கல்வி அதிகாரிகளையும் கண்டித்தார். மேலும் அவற்றை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டார்.

மாணவர்களின் கற்றல் திறன்

தொடர்ந்து அவர் 8-ம் வகுப்பறைக்கு சென்று மாணவர்களின் கற்றல் திறன், பள்ளியில் மதியம் வழங்கப்படும் சத்துணவின் சுவை, தரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அப்போது அந்த வகுப்பறையில் இயங்காத மின்விசிறியை உடனடியாக சரிசெய்யும்படி உத்தரவிட்டார். பின்னர் சமையலறைக்கு சென்று சாதம், சாம்பார், முட்டை மற்றும் அங்கிருந்த மசாலா பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு சுவையாக சத்துணவு வழங்கும்படி சமையலர்களிடம் கூறினார்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜோதீஸ்வரன்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

பெண்கள் ஜெயில்

அதைத்தொடர்ந்து பால்கிஷன்கோயல் தொரப்பாடியில் உள்ள பெண்கள் மத்திய ஜெயிலில் கைதிகளுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மருத்துவமனை, கைதிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளி, உணவு கூடங்களை ஆய்வு செய்தார். பின்னர் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பெண்கள் ஜெயிலில் செயல்படுத்தப்பட்டு வரும் விதை திட்டம் மற்றும் சிறைவாசிகளின் பிள்ளைகளுக்கான கல்வி திட்டங்களை மற்ற சிறைகளுக்கு ஆய்வுக்கு செல்லும்போது நடைமுறைப்படுத்த அறிவுறுத்துவேன் என்று பால்கிஷன்கோயல் தெரிவித்தார்.

ஆய்வின்போது வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் மற்றும் ஜெயில் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story