காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Aug 2023 2:46 AM GMT (Updated: 25 Aug 2023 6:33 AM GMT)

காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தை திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருக்குவளை,

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்று பெயரிட்டு அதை சட்டசபையில் 7.5.22 அன்று 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்; முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்படும்; பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதற்கான அரசாணையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டது.

முதன்முதலாக 1922-23-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் நீட்சிதான் தற்போதைய முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று (கடந்த ஆண்டு) மதுரை சிம்மக்கல், ஆதிமூலம் ஆரம்பப் பள்ளி என்ற மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

தொடங்கி வைத்தார்...

இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு 25-ந் தேதி (இன்று) முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டம், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த வகையில், திருக்குவளை பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார். அதனை தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் உணவு சாப்பிட்டார்.







என்ன உணவுகள்?

இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு நாளுக்கும் காலையில் என்னென்ன உணவு வகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது பட்டியலாக வெளியிடப்பட்டது. அந்த வகையில், ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல், கோதுமை ரவா உப்புமா, காய்கறிச் சாம்பார் போன்ற உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமைகளில் ரவா கேசரி, சேமியா கேசரி போன்ற இனிப்பும் பரிந்துரைக்கப்பட்டன. ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 50 கிராம் அளவில் ரவை, கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் போன்ற தானியமும், 15 கிராம் பருப்பும், உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளும் வழங்கப்படுகின்றன. சமைத்த உணவு 150 முதல் 200 கிராம் வரையிலும், 60 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பாரும் வழங்கப்படுகின்றன.

தரமான, சுத்தமான முறையில் காலை உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்ததோடு விட்டுவிடாமல், அதை கண்காணிக்க, மாநிலம், மாவட்டம், பள்ளி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story