விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்: அரியலூரில் 479 அரசு பள்ளிகளில் நாளை தொடக்கம்


விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்: அரியலூரில் 479 அரசு பள்ளிகளில் நாளை தொடக்கம்
x

அரியலூரில் விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 479 அரசு பள்ளிகளில் நாளை தொடங்குகிறது. இதன் மூலம் 26 ஆயிரத்து 407 மாணவ-மாணவிகள் பயனடைவார்கள்.

அரியலூர்

முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன்குடியிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு, வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஜெயங்கொண்டம் ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி ஆகிய 9 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

26,407 மாணவர்கள் பயனடைவார்கள்

இந்த திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 513 மாணவ-மாணவிகள் பயனடைந்து வந்தனர். தற்போது தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அரியலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 479 அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 26 ஆயிரத்து 407 மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான சோதனை முயற்சி அரியலூர் மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படவுள்ள பள்ளிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story