விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்: பெரம்பலூரில் 263 அரசு பள்ளிகளில் நாளை தொடக்கம்
பெரம்பலூரில் விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 263 அரசு பள்ளிகளில் நாளை தொடங்குகிறது. இதன் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் பயனடைவார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விரிவுப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 180 மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 263 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான சோதனை முயற்சி பெரம்பலூர் மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படவுள்ள பள்ளிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.