காரை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுயானைகள் முகாம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பலா மரங்களில் சீசன் காரணமாக பலாப்பிஞ்சுகள் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த பலாக்காய்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வெளியேறி, குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள காட்டுயானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அவ்வப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வருகின்றன. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
காரை தாக்கியது
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் பகுதிக்கு கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. குஞ்சப்பனை அருகே காட்டுயானை ஒன்று சாலையோரத்தில் நின்று தழைகளை தின்று கொண்டு இருந்தது.
உடனே டிரைவர், யானையை விட்டு சற்று ஒதுங்கியவாறு தனது காரை இயக்கினார். அப்போது திடீரென மிரண்ட காட்டுயானை, காரை நோக்கி ஓடி வந்தது. பின்னர் காரின் முன் பகுதியை தனது துதிக்கையால் தாக்கி சேதப்படுத்தியது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு நிலவியது.
வீடியோ வைரல்
பின்னர் காட்டுயானை சற்று பின்னோக்கி சென்றதும், டிரைவர் விரைவாக காரை இயக்கி அங்கிருந்து சென்றார். அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் தங்களது பாதுகாப்பு கருதி சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி வைத்தனர். சிறிது நேரம் கழித்து காட்டுயானை, அங்கிருந்து சென்றதும் போக்குவரத்து சீரானது. முன்னதாக காரை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தும் காட்சியை பிற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.