ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் தனது மனைவி வள்ளி (40), தம்பி ரமேஷ் (45), அவரது மனைவி சாந்தி (35) ஆகியோருடன் இன்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர்கள் 4 பேரும் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது முருகன் கூறுகையில், எனக்கும், எனது தம்பி ரமேசுக்கும் 2 ஏக்கர் நிலம் பொதுவாக இருந்தது. அந்த நிலத்தை எங்களது அண்ணன் சிவசங்கரன் என்பவருடைய மகன் ராம்கி என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டார். இதுகுறித்து வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார். இதைக்கேட்டறிந்த போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு அரசு அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் 4 பேரையும் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.