தமிழகத்தில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


CM Stalin inaugurated Excavation work
x

தமிழகத்தில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தின் 8 இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகையில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதே போல் தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் மருங்கூர் ஆகிய இடங்களில் முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறையும், 6 கட்ட அகழாய்வை மாநில தொல்லியல்துறையும் மேற்கொண்டன. முதல்-அமைச்சர் ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி வைத்த 9-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பரில் நிறைவடைந்தன.

10-ம் கட்டமாக 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தர்மபுரி பெரும்பாலை தளத்தில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கையையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சங்க கால வரலாற்று சின்னங்களைக் கொண்ட பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் கோட்டை சுவர், அரண்மனை திடல் போன்ற இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரை முதற்கட்ட அகழாய்வு நடைபெற்றது. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைக்கப்பெற்ற தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி, பாசி மணி, பல விதமான பானை ஓடுகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் குறித்த விரிவான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், 2-ம் கட்ட அகழாய்வு பணிக்கும் அனுமதி கோரப்பட்டது.

மேலும், அகழாய்வு பணிக்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 10-ம் கட்ட அகழாய்வு பணிக்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அகழாய்வு பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.


Next Story