கீழடியில் பச்சை, ஊதா நிறங்களில் கண்ணாடி பாசி மணிகள் கண்டெடுப்பு
கீழடியில் பச்சை, ஊதா நிறங்களில் கண்ணாடி பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கீழடியில் இதற்கு முன்பு 8 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய், சுடுமண்ணால் செய்த சில்லுவட்டுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், பழங்கால பெரிய, சிறிய பானைகள், சேதமடைந்த பானையுடன் கூடிய செங்கல் சுவர் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அடி நீளத்திற்கு நேர்த்தியான செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. சுவரின் மேல் செங்கல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து கட்டப்பட்டிருந்தது. குழியின் ஓர பகுதியில் இந்த சுவர் தென்பட்டதால் அருகில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்ய திட்டமிட்டு, தற்ேபாது 9-வது குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த குழியில் பச்சை, ஊதா கலரில் பாசிமணிகள் கிடைத்துள்ளது. குழிகள் ஆழமாக தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது கூடுதலாக மேலும் பொருட்கள் கிடைக்கும் என தெரிகிறது.