'நான் முதல்வன்' திட்டத்தில்அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. மாதிரி தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் `நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் மாதிரி தேர்வு இணையதளம் மூலம் நேற்று நடத்தப்பட்டது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என இரு பிரிவுகளில் தேர்வு நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு தேர்வின் போது எடுத்து செல்ல வேண்டியவை, ஆடை குறிப்புகள், தேர்வின் முக்கியத்துவம், கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் தேர்வு எழுதும் முறை குறித்து விளக்கப்பட்டு, மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, திருச்செங்கோடு வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்திரசேகரன், ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாதிரி தேர்வில் 105 பேர் கலந்து கொண்டனர். தேர்வை பயமின்றி எழுத முன் அனுபவம் பெறும் வகையில் இந்த தேர்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.