தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - முன்னாள் ஊழியர் கைது


தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - முன்னாள் ஊழியர் கைது
x

தாம்பரத்தில் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 61). இவர், தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றியபோது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பணத்தை தானே எடுத்துக் கொண்டு மோசடி செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் தபால் துறையில் பணியாற்றுவது போல், தபால் துறை பனியனுடன் சுற்றி வந்த அவர், வேலை தேடி வருபவர்களை குறிவைத்து அவர்களுக்கு தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்து விட்டார்.

இதில் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்த வெங்கடேசன், ரூ.15 லட்சம் கொடுத்து ஏமாந்த பொன்னம்பலம், ரூ.6.30 லட்சம் கொடுத்து ஏமாந்த தனுஷ், ரூ.3.50 லட்சம் கொடுக்க ஏமாந்த மூர்த்தி உள்பட சிலர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று தாம்பரத்தில் ரவியை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இந்த தகவலறிந்து அவரால் ஏமாற்றப்பட்ட சுமார் 15-க்கும் மேற்பட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.

தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டபோது, மோசடி செய்த பணத்தை அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், தன்னிடம் தற்போது எந்த பணமும் இல்லை எனவும் ரவி கூறினார். பின்னர் கைதான ரவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story