வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் கைது


வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:47 PM GMT)

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் நாகராஜா கோவில் வடக்கு ரத வீதியில் உள்ளது. இங்கு தபால் சேவை, பார்சல் சேவை மற்றும் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பயனடைய தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தலைமை தபால் நிலையத்துக்கு வரும் பார்சலில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், 11-ந் தேதி (நேற்று) காலை வெடித்து சிதறும் என்றும் எழுதப்பட்டு இருந்தது. மேலும் கடிதத்தின் கீழ் தீவிரவாத அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை படித்து பார்த்த தபால் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் வடசேரி போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து சோதனை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலமாக அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தபடி வெடிகுண்டு எதுவும் தலைமை தபால் நிலையத்தில் சிக்கவில்லை.

கண்காணிப்பு கேமரா

பின்னர் இதுபற்றி தலைமை தபால் நிலைய சீனியர் போஸ்ட் மாஸ்டர் செல்வராஜ் வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என ஆய்வு செய்யப்பட்டது.

கடிதத்தில் வடிவீஸ்வரம் தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் முத்திரை பதிவாகி இருந்தது. இதை வைத்து பார்த்தபோது கடிதத்தை அனுப்பிய மர்ம நபர் வடிவீஸ்வரம் தபால் நிலையத்தில் இருந்து கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து வடிவீஸ்வரம் தபால் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.

முன்னாள் ஊழியர் கைது

அந்த உருவத்தை கைப்பற்றி அவர் யார்? என நடத்தப்பட்ட விசாரணையில், மருங்கூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 45) என்பதும், தபால் நிலைய முன்னாள் ஊழியரான இவர் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதும் தெரியவந்தது.

பின்னர் வடசேரி போலீசார் அசோக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, "நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அசோக்குமார் சுசீந்திரம் தபால் நிலையத்தில் 18 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் கல்வித்தகுதி அடிப்படையில் அசோக்குமார் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் பணியில் இருந்து விலகி விட்டார். எனினும் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மீது அவருக்கு அதிருப்தி இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார்" என்றனர்.

பணி நிரந்தரம் செய்யப்படாத ஆத்திரத்தில் முன்னாள் ஊழியர் தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story