'எங்கும் மது வெள்ளம்... எப்போதும் மது வெள்ளம்' - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
தமிழ்நாட்டை ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நோக்கம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். மக்கள்நலனில் சிறிதும் அக்கறையின்றி, அரசின் வருவாயையும், சில தனி ஆள்களின் வருவாயையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கமுக்கமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இரு நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில், இது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற வணிக பயன்பாட்டு இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு உரிமம் பெற்று, மதுவை இருப்பு வைக்கவும், பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது பரிமாறுவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஒற்றை வரியில் விவரிக்க வேண்டும் என்றால், 'எங்கும் மது வெள்ளம்... எப்போதும் மது வெள்ளம்' என்றுதான் குறிப்பிட வேண்டும். அரசின் இந்த முடிவை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த முடிவால் ஏற்படவிருக்கும் சமூக, பண்பாட்டுச் சீரழிவுகளும், கேடுகளும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணியாது. ஆனால், தமிழ்நாட்டில் மதுவைக் கையாளும் உரிமை சில குழுக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவுதான் இத்தகைய மிக மோசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறைக்கான மானியக் கோரிக்கையில் கூட இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு இந்த கமுக்கமாக வைத்திருக்க அரசு முயற்சி செய்திருக்கிறது. மார்ச் 18-ஆம் தேதியிட்ட அரசிதழ் மற்றும் அது குறித்த செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானதைத் தொடர்ந்து தான் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இது வெளியில் தெரியக்கூடாது அளவுக்கு தீய செயல் என்பதை தமிழ்நாடு அரசே உணர்ந்திருந்தும் அதற்கு அனுமதி அளித்தது ஏன்?
தமிழ்நாட்டை ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். அதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயருக்கு தீரா அவப்பெயரையும், துடைக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்தி விடும்.
இதை உணர்ந்து திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.