சமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்தது


சமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே துறையூர் கிராமத்தில் சமுதாய கூட கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சமையல் உதவியாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே துறையூர் கிராமத்தில் சமுதாய கூட கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சமையல் உதவியாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சேதமடைந்த சமையல் கூடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட 21-வது வார்டு துறையூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் நலன் கருதி கடந்த 1976-ம் ஆண்டு நகராட்சி சார்பில் இந்த பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் ஒரு கட்டிடத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளி கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்த்தால் முழுவதுமாக அகற்றப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் 16 மாணவர்கள், ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு உதவி ஆசிரியரோடு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூட கட்டிடமும் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சமையல் கூடத்தின் அருகில் சமையல் உதவியாளர் கலா (வயது 45 ) சமையல் செய்வதற்கான பணிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் கம்பிகள் திடீரென இடிந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் சமையல் உதவியாளர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மாற்று இடத்தில் சமையல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், துறையூர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சேதமடைந்த பள்ளி சமையல் கூடம் கட்டிடத்தை சீரமைத்து அல்லது இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டித் தர வேண்டுமென தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வருகிறேன். மேலும் மாணவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறேன். நகராட்சி நிர்வாகம் உடனடியாக இடிந்த நிலையில் உள்ள சமையல் கூடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சமையல் கூடம், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்தால் இப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இனி இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் நகராட்சி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சமையல் கூடம் இடிந்து விழுந்த செய்தி கேட்ட சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story