கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - திருமாவளவன்


கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - திருமாவளவன்
x

மதுவிலக்கு மாநாட்டுக்கு அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுப்பது குறித்து இரண்டொரு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கு அ.தி.மு.க., விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோவும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வரும் சூழலில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்திக்க உள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளோம். மத்திய அரசை தி.மு.க.வும் வலியுறுத்த வேண்டும் என்பதால் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். அரசியலுக்காக மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவில்லை. முதல்-அமைச்சருடனான சந்திப்பின்போது, மதுவிலக்கு மாநாடு குறித்து ஆலோசிப்போம், மாநாட்டிற்கு அழைப்பும் விடுப்போம்.

அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுப்பது குறித்து இரண்டொரு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுப்பதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவே நான் நம்புகிறேன். மதுவிலக்கை பேசுவதால் எந்த விளைவுகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story