மழை நின்ற பின்னரும் பூண்டி ஏரிக்கு 790 கனஅடி தண்ணீர் வருகை
மழை நின்ற பின்னரும் பூண்டி ஏரிக்கு 790 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
வினாடிக்கு 790 கனஅடி தண்ணீர்
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்யவில்லை. எனினும் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 790 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி காப்பு காடுகள் மற்றும் ஓடைகளில் இருந்து வரும் நீர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் கிருஷ்ணா கால்வாயிலும் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. மழை நின்றாலும் பூண்டி ஏரிக்கு மட்டும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம்
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இதில் 2.1 74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 53 கன அடி தண்ணீர் பேபி கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் 2.485 டி.எம்.சி. உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 102 கனஅடி வீதம் நீர் வருகிறது. வினாடிக்கு 192 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி. ஆகும். இதில் 497 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு வெறும் 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் 2.474 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரியில் வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 10 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.