சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை -ஐகோர்ட்டு வேதனை


சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை -ஐகோர்ட்டு வேதனை
x

அனைவருக்கும் பொதுவான மயானம் வேண்டும்: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை ஐகோர்ட்டு வேதனை.

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை என சென்னை ஐகோர்ட்டு வேதனை கருத்து தெரிவித்துள்ளது. மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதையில் அடக்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவகுறிச்சி கிராமத்தில் வண்டிப்பாதையில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி. என அனைத்து பிரிவினருக்கும் தனித்தனி மயானங்கள் உள்ள நிலையில், வண்டிப்பாதையில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதையில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து, வேறு இடத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

சாதி கட்டுகள்

இந்த உத்தரவை எதிர்த்து முத்துசாமி, அன்பழகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டன. மதச்சார்பற்ற நாட்டில் இன்னமும், சாதி கட்டுக்களை உடைத்து எறிய முடியவில்லை என்பது வேதனைக்குரியது.

மதச்சார்பற்ற அரசும், சாதி ரீதியாக தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

சமத்துவம் வேண்டும்

'சாதிகள் இல்லையடி பாப்பா' என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கி பயணம் செய்யும்போதாவது சமத்துவத்தை தொடங்க வேண்டும். எனவே, மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக அரசு மாற்ற வேண்டும், இந்த மாற்றத்தை அரசு உடனே தொடங்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்கிறோம். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story