ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழாகலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றினார்


ஈரோடு வ.உ.சி. மைதானத்தில்     குடியரசு தின விழாகலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றினார்
x

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அரசு மற்றும் சமூகப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அரசு மற்றும் சமூகப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குடியரசு தின விழா

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி விளையாட்டு மைதானம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மைதானத்தில் தேசியக்கொடி ஏற்ற கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார். அவரை மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினிசந்திரா வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து அரசு மரியாதையுடன் விழா மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

தேசிய கொடி ஏற்றினார்

கொடிமேடைக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கு தயாராக இருந்த தேசிய கொடியை கொடிக்கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்தினார். அப்போது காவல்துறை இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் திறந்த வேனில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கொடி மேடைக்கு வந்த அவர்கள் தேசத்தின் குடியரசு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர்.

அணிவகுப்பு

அதன்பின்னர் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பதக்கம் பெற்ற போலீசார் 53 பேருக்கு கலெக்டர் பதக்கங்களை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, அரசு மருத்துவமனை, 108 ஆம்புலன்சு சேவை, சித்த மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்து துறை, தொழிலாளர் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 485 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலனுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கலை நிகழ்ச்சி

குடியரசு தின விழாவையொட்டி பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கிறிஸ்து ஜோதி மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், கல்கடம்பூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், பெருந்துறை கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், மாவட்ட இசைப்பள்ளி ஆகியவற்றை சேர்ந்த மொத்தம் 532 மாணவ-மாணவிகள் பாடலுக்கு ஏற்ப குழுவாக நடனம் ஆடினார்கள்.

இந்த விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) என்.பொன்மணி, மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் பிரபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் (பொது), ஜெகதீசன் (வளர்ச்சி), மகளிர் திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story