ஈரோடு - நெல்லை ரெயில் இரவு 8.30 மணிக்குள் வருமா?; பயணிகள் எதிர்பார்ப்பு


ஈரோடு - நெல்லை ரெயில் இரவு 8.30 மணிக்குள் வருமா?; பயணிகள் எதிர்பார்ப்பு
x

ஈரோடு - நெல்லை ரெயில் இரவு 8.30 மணிக்குள் நெல்லை வருமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருநெல்வேலி

ஈரோடு - நெல்லை ரெயில் நெல்லைக்கு இரவு 8.30 மணிக்குள் வந்து சேருமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இரட்டை பாதை தயார்

நெல்லை - மதுரை இடையே இரட்டை அகல ரெயில் பாதையில் நெல்லை - திருமங்கலம் இடையே 139 கிலோ மீட்டர் தூரம் இரட்டை ரெயில் பாதையில் ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மீதமுள்ள திருமங்கலம் - மதுரை இடையே 17.32 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை பாதை அமைக்கப்பட்டு, புதிய இரட்டை ரெயில் பாதையில் பெங்களூரு தென் சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்கிறார். ஆய்வுக்கு பிறகு அவர் ஓரிரு நாட்களில் நெல்லை - மதுரை இடையே முழுமையாக இரட்டை ரெயில் பாதையில் ரெயில்கள் இயங்கும்.

ஈரோடு -நெல்லை

இதன் மூலம் 2.30 மணி நேரத்தில் நெல்லையில் இருந்து மதுரையை சென்றடைய முடியும். ஏற்கனவே இரட்டை ரெயில் பாதைகளின் மேம்பாடு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ரெயில்களின் பயண நேரம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்படும்.

இதுதவிர ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரெயில் மணியாச்சியில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 9.40 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரெயிலின் வேகத்தை அதிகரித்து இரவு 8.30 மணிக்குள் நெல்லைக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

நேரம் குறைப்பு, நீட்டிப்பு

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் ரெயிலானது மாலை 5.45 மணிக்கு மதுரைக்கு வந்து பின்னர் அங்கிருந்து மணியாச்சி வரை முழு வேகத்துடன் இரவு 8.15 மணிக்கு வந்தடைந்து விடுகிறது. மணியாச்சியில் இருந்து மீதமுள்ள 29 கி.மீ நெல்லையை அடைவதற்கு 1.30 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

தினமும் இரவு 9.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லை சந்திப்புக்கு வருவதால், இங்கிருந்து பஸ் கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்துள்ளதால் அட்டவணையில் மாற்றம் செய்து இரவு 8.30 மணிக்குள் நெல்லையை வந்தடையும் வகையில் ரெயிலை இயக்க வேண்டும். மேலும் இந்த ரெயிலை சேரன்மாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இரவு 10 மணிக்குள் செங்கோட்டைக்கு சென்றடையும் வகையில் நீட்டிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து வருகிற ரெயில்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் நடைமேடை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளது. மேலும் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு நெல்லையில் டீசல் என்ஜினை அகற்றி விட்டு மின்சார என்ஜின் இணைக்கப்படுகிறது. இதற்காக ஒரு நடைமேடையை காலியாக வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சில நாட்களில் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து முழுமையாக மின்சார என்ஜினில் ஓடத்தொடங்கும். அதன்பிறகு நெல்லை சந்திப்பில் நடைமேடை கிடைப்பதில் உள்ள சிக்கல் குறையும். அப்போது ஈரோடு -நெல்லை ரெயிலை இரவு 8.30 மணிக்குள் சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் வந்தடைவதற்கு வாய்ப்பு கிடைக்கும்'' என்றனர்.


Next Story