ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்;அமைச்சர் சு.முத்துசாமி சூளுரை


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்;அமைச்சர் சு.முத்துசாமி சூளுரை
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு பெரியார் நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைத்தலைவர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை ஆதிதிராவிட மக்கள் உள்ளனர். எனவே அவர்களது ஓட்டுதான் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கிறது. உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதும் முதல்முதலாக எதிர்ப்பு குரல் கொடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் 7 ஆதிதிராவிடர் காலனிகள் உள்ளன. அவர்களது ஓட்டு அனைத்தும் எங்களுக்கு தான் கிடைக்கும். எனவே வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 லட்சம் வாக்குகள்

அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-

முன்ளாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த ஆதிதிராவிட மக்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு காரணமாக பலரும் உயர் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதன்படி 1,120 டாக்டர்கள், 4 ஆயிரம் என்ஜினீயர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் அம்பேத்கர் சிலையை வைப்பதற்கு அனுமதி அளித்ததுடன் புதிய அம்பேத்கர் சிலையையும் திறந்து வைத்தார்.

திருமகன் ஈவெரா இறந்த 14 நாட்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பது சட்டப்படி சரியாக இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில் சரியா? அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் யாரையும் தட்டிவிட்டு வெற்றி கோட்டையை அடைய விரும்பவில்லை. மற்றவர்களை விட வேகமாக ஓடிச்சென்று வெற்றி கோட்டையை அடையவே விரும்புகிறோம். இந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவிடத்தில் அரங்கமாக கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அங்கு 41 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும், சமுதாய கூடமும் அமைக்கப்படும். தேர்தல் முடிந்தபிறகு இந்த பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உள் இடஒதுக்கீடு

அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு வரை ஆதிதிராவிடர்களின் 85 சதவீத ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஓட்டுகளும் தி.மு.க.வுக்கு ஆதரவாக மாறியது. இந்த இடைத்தேர்தலிலும் 100 சதவீத ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில்தான், ஆதிதிராவிடர் மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக அந்த சமுதாய மக்கள் பயன் அடைந்த கல்வி, வேலைவாய்ப்பு குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதிதிராவிடர்களின் ஓட்டு கிடைக்க வேண்டும். தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதன் மூலமாக அந்த சமுதாய மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகளுக்கு பாலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, மெய்யநாதன், ஆவடி நாசர், சி.வி.கணேசன், மதிவேந்தன், ரகுபதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், இளைஞர் அணி மாநில நிர்வாகி கே.இ.பிரகாஷ், பகுதி செயலாளர் முருகேசன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் சித்திக், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story