ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக நிலைப்பாடு என்ன? - டி.டி.வி தினகரன் பதில்


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக நிலைப்பாடு என்ன? - டி.டி.வி தினகரன் பதில்
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தனார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டி.டி.வி தினகரன் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். நானும் கூட போட்டியிடலாம், தேர்தலில் நிற்பது எனக்கு பயமில்லை. இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது பற்றி வரும் 27-ந் தேதி முடிவு அறிவிப்போம்.

இடைத்தேர்தலில் அமமுக சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னம் இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story