ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சத்யபிரத சாகு
இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி எந்த புகாரும் வரவில்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 61 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தாலும், இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி எந்த புகாரும் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதனை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ள அவர், பணப்பட்டுவாடா பற்றி சமூக வலைதளங்களில் எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.