நகர பரிபாலன சபை உருவான நாள்; ஈரோடு தினம் நாளை கொண்டாடப்படுகிறது
ஈரோடு நகர பரிபாலன சபை உருவான செப்டம்பர் 16-ந் தேதி ஈரோடு தினமாக நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
ஈரோடு
ஈரோடு நகர பரிபாலன சபை உருவான செப்டம்பர் 16-ந் தேதி ஈரோடு தினமாக நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
ஈரோடு நகரம்
ஈரோடு மாநகரம் 110 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. ஈரோடு நகரை மாநகராட்சி என்ற கனவை விதைத்தவர் பெரியார். அவர் 3 ஆண்டுகள் (1917 முதல் 1920) ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டையும், வீரப்பன்சத்திரத்தையும் இணைத்து மாநகரமாக்கவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.
பின்னர் 90 ஆண்டுகள் கடந்து முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியால், ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் நகரங்கள், பி.பி.அக்ரகாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், வில்லரசம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளை இணைத்து ஈரோடு மாநகரம் உருவானது.
புராணம்
பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய 2 ஓடைகளின் நடுவே அமைந்த ஊர் ஈரோடு என்று காரணப்பெயர் கூறப்படுகிறது. ஈரோடை என்பதே ஈரோடு என்று மருவியதாகவும் கூறப்படுகிறது. பிரம்மாவின் தலையை காளி உடைத்தபோது ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு என்பதும், ஆருத்ர கபாலீசுவரர் கோவில் கொண்டு இருப்பதால் இது ஈரோடு என்பதும் புராண செய்திகள் ஆகும்.
பண்டைய ஈரோடு கோட்டை, பேட்டை என்று 2 பகுதிகளை மட்டுமே கொண்டு இருந்தது. கோட்டைக்கும் பேட்டைக்கும் நடுநாயகமாக இருந்தது மணிக்கூண்டு பகுதி. மணிக்கூண்டின் கிழக்கு பகுதி பேட்டை என்றும், மேற்கு பகுதி கோட்டை என்றும் அழைக்கப்பட்டது.
கோட்டை
கோட்டை பகுதியில் மிகப்பெரிய மண்கோட்டை இருந்தது. இந்த கோட்டை குறித்து 7-11-1800 அன்று ஆங்கிலேய அதிகாரியான புக்கானன் என்பவர் தனது குறிப்பில் மண் கோட்டை இருந்ததற்கான சான்றுகளை குறிப்பிட்டு உள்ளார். இந்த கோட்டை 1878-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் போது இடிக்கப்பட்டது.
கோட்டையை இடித்து அங்கே இருந்த அகழியில் கொட்டுவதற்கு ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. கோட்டை மண் போட்டு அகழி மூடப்பட்ட பகுதியே தற்போதைய அகில்மேடு வீதியாகும்.
பரிபாலன சபை
ஈரோட்டை பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு கொண்டது. பூந்துறை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பெருந்துறை தாலுகாவின் கீழ் கிராமமாகவும் இயங்கியது. இந்த நிலைகள் எல்லாம் கடந்து கி.பி.1871-ம் ஆண்டு ஈரோடு நகரம் தனித்துவம் பெற்றது.
ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு ஈரோடு நகர பரிபாலன சபை கடந்த 16-9-1871 அன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு ஈரோடு நகர சபை உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்து நாளை (வெள்ளிக்கிழமை) 151-வது ஆண்டு தொடங்குகிறது. ஈரோடு நகர பரிபாலன சபையின் முதல் தலைவராக ஏ.எம்.மெக்ரிக்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடன் 7 நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
ஈரோடு தினம்
இந்த நாள் (செப்டம்பர் 16) ஈரோடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்பது கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசுவின் நீண்டநாள் கோரிக்கையாகும். அரசு சார்பில் ஈரோடு தினம் கடைபிடிக்க எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், ஈரோட்டை சேர்ந்த பல சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஊடகத்தினர் செப்டம்பர் 16-ந் தேதியை ஈரோடு தினமாக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ந் தேதி, பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி ஆகிய சிறப்பு மிகுந்த 2 நாட்களின் இடைப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதி ஈரோடு தினம் கொண்டாடப்படுவது சிறப்புக்கு உரியதாகும். பெருமைக்குரிய ஈரோடு தினத்தை நாளை (வெள்ளிக்கிழமை) அனைவரும் இணைந்து கொண்டாடுவதுடன், ஈரோட்டில் பெருமைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல், குடிநீர் ஆகியவற்றை பாதுகாக்கவும் உறுதி ஏற்போம்.