ஈரோடு இடைத்தேர்தல்: மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது


ஈரோடு இடைத்தேர்தல்: மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது
x

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

ஈரோடு,

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குகளைச் செலுத்த, தொகுதிக்கு உட்பட்ட 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர் 238 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம், அதாவது 48 வாக்குச்சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈ.வி.எம்.), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டக அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட 20 வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. இந்தப் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 34 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், துணை ராணுவ வீரர்கள், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.


Next Story