நெரிசலில் சிக்கும் ஈரோடு பஸ் நிலையம்சோலார் தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை


நெரிசலில் சிக்கும் ஈரோடு பஸ் நிலையம்சோலார் தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை
x

பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை

ஈரோடு

நெரிசலில் சிக்கித்தவிக்கும் ஈரோடு பஸ் நிலையத்தில் நெருக்கடியை தவிர்க்க சோலார் தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

நெரிசல்

ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் பஸ் நிறுத்த பகுதிகள் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் உள்ளது. ஒரே பாதையில் பஸ்கள் வந்து செல்வதால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.

விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், திங்கட்கிழமைகளில் ஈரோடு பஸ் நிலையத்துக்குள் வந்து பஸ்களில் ஏறி செல்வது என்பது பயணிகளுக்கு மிகப்பெரிய தொல்லையாகவே உள்ளது. பணிகளுக்கு செல்பவர்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறி, இறங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

தற்காலிக பஸ் நிலையம்

ஈரோடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ஈரோடு மாநகரத்தில் தென்மாவட்ட பஸ்கள் வருவதை தடுக்கவும் சோலார் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு பணிகள் முழுவதும் முடிந்த நிலையிலும், இன்னும் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அந்த பஸ்நிலையம் பொழுதுபோக்கு தலமாக, திறந்தவெளி மதுக்குடிக்கும் இடமாக மாறி வருகிறது. ஆனால், ஈரோடு மத்திய பஸ் நிலையம் நெரிசலில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நேற்று பஸ் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலால் மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்திரோடு பகுதிகளில் கூட வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

கோரிக்கை

எனவே சோலார் தற்காலிக பஸ் நிலையத்தை திறந்து பஸ்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அங்கிருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு இணைப்பு பஸ்கள் விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஆனால், தனியார் பஸ் உரிமையாளர்களின் அழுத்தம் காரணமாக தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்ற புகார்களும் கூறப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் வசதி மற்றும் ஈரோட்டின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமும், அதிகாரிகளின் கடமையுமாகும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story