ஈரோடு: யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது


ஈரோடு: யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது
x

டி.என்.பாளையம் வனப்பகுதியில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற 7 நபர்களை வனத்துறையினர் கைது செய்து 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகம் எல்லைக்குட்பட்ட பகுதியில் யானையின் தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனப் பணியாளர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெருமுகை கரும்பாறை பகுதியில் வசிக்கும் பிரபுகுமார் (37) மற்றும் அந்தியூர் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ராமசாமி (37) ஆகிய இருவரும் பெருமுகை ஊராட்சி கரும்பாறை வனப்பகுதியருகே மோட்டார் சைக்கிளில் சாக்குப் பையில் யானை தந்தங்களை எடுத்து வரும்போது வன பணியாளர்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர்.

அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற சம்பவத்தில் மாரச்சாமி, குமார், மசனன், சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட 7 பேரை டி.என்.பாளையம் வனத்துறையினர் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் 2 யானை தந்தங்கள், புதைக்கப்பட்ட யானையின் மண்டை ஓடு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Next Story