295 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள்; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்


295 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள்; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
x

ராதாபுரம் தொகுதியில் 295 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் தொகுதியில் 295 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் உதவிபெறும் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான தொடுதிரை வசதியுடன் கூடிய கணினி, இணையதள கேமரா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் விழா, ராதாபுரம் தனியார் மண்டபத்தில் நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிகளை சீரமைக்க...

ஆசிரியர் பணிக்கு இணையாக வேறு ஏதும் கிடையாது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக பாடங்கள் நவீன முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்களும் உலகளாவிய அறிவுத்திறனை வளர்த்து கொள்ள முடியும். இதனால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு ஊரிலும் வழிபாட்டு தலங்களை அமைப்பதை விட அரசு பள்ளிகளை சீரமைப்பதே உயர்வானது. தமிழகத்தில் பலகட்ட போராட்டங்களுக்கு பின்னரே உயர்கல்வி கற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. முன்பு தமிழகத்தில் யாரும் நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது. பின்னர் ஒரு சமுதாயத்தினர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது.

தொடர்ந்து ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதத்தில் இருந்த கல்வியை உள்ளூர் மொழியிலும் கற்று கொடுக்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. மெக்காலே பிரபு புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதால் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்று கொடுத்தனர். தமிழகத்தில் சமூகநீதியை கற்று கொடுத்தது சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்தான். இங்கு பயின்ற 10 லட்சம் பேரில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்தான் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சங்க மாநில மாநாடு

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில மாநாடு பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகையா வரவேற்று பேசினார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மாநாட்டில், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட தனியார் பள்ளி ஆசிரியர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். தகுதியுள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும். இளம் மழலையர் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் செய்வதை ஆன்லைனில் வழங்கிட வேண்டும். தனியார் பள்ளிகள் தரமான கல்வி வழங்கி வருவதை மேலும் மெருகேற்ற அரசு சார்பில் பயிற்சிகள் வழங்க வேண்டும். கல்வி கட்டணம் நிர்ணயிப்பதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்ட குழுவில் பள்ளி தாளாளர்கள் சிலரையும் நியமிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். பள்ளி அங்கீகார புதுப்பித்தல் நடைமுறை ஆன்லைனில் மட்டுமே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு நர்சரி, பிரைமரி பள்ளிகள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் சதீஷ், மாநில பொருளாளர் ஆனந்தகுமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story