சமத்துவ பொங்கல் விழா
பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
காவேரிப்பாக்கம் ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் ஜெயந்தி பிச்சாண்டி தலைமை தாங்கினார். இதில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர்.
விழாவில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு பூஜையிட்டு வழிபட்டார். இதனைதொடர்ந்து, இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள், சிறுவர்கள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். பின்னர் அனைவரும் மத்துவ பொங்கல் விழா குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த அனைத்து குழந்தைகளுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கலெக்டர் பரிசு வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுடன் கலெக்டர் பொங்கல் சாப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவர் அனிதா குப்புசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சையிப்புதீன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சக்தி, ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தகுமார், ஊராட்சிமன்ற துணை தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.