கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: முதல்-அமைச்சரின் 'மஞ்சப்பை' திட்டத்துக்கு மத்திய அரசு அதிகாரி பாராட்டு


கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: முதல்-அமைச்சரின் மஞ்சப்பை திட்டத்துக்கு மத்திய அரசு அதிகாரி பாராட்டு
x

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மஞ்சப்பை திட்டத்தை மத்திய அரசு அதிகாரி பாராட்டினார்.

சென்னை

காலநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட போகும் விளைவுகளை உணர்ந்து மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை வாழவேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் வனத்துறை உதவி ஐ.ஜி. கார்த்திக்கேயன் கலந்துகொண்டார்.

அவர், தண்ணீர், மின்சாரம் சேமிப்பு, ஆரோக்கியமான உணவு பழக்கம், பிளாஸ்டிக் தவிர்ப்பு போன்ற கருத்துக்களை உள்ளடக்கி 75 அம்சங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்களை கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு வழங்கி இதனை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அவரது தலைமையில் வனச்சரகர் கலைவேந்தன், வனவர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் பார்வையாளர்களும், கிண்டி சிறுவர் பூங்கா ஊழியர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை உதவி ஐ.ஜி. கார்த்திக்கேயன் பேசியதாவது:-

இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்வியல் முறையை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். பழமையான வாழ்க்கை முறையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும். 'லிப்ட்' இருந்தாலும் நடந்து செல்ல வேண்டும். நடைபயிற்சிக்கு 'திரேட் மில்' பயன்படுத்துவதால் மின்சார தேவை ஏற்படுகிறது. எனவே பூங்கா போன்ற இடங்களில் நடைபயிற்சி செய்யலாம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள 'மஞ்சப்பை' திட்டம் சிறப்பு வாய்ந்தது ஆகும். நான் சிறுவயதில் பள்ளிக்கு செல்லும்போது மஞ்சள் பைதான் எடுத்து செல்வேன். ஒரு முறை பயன்படுத்த கூடிய 'பிளாஸ்டிக்' பையை தவிர்த்து விடுங்கள். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு துண்டுபிரசும் ஆங்கில மொழியில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழ் மொழியில் அச்சடித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வனத்துறை உதவி ஐ.ஜி. கார்த்திக்கேயனிடம் வைக்கப்பட்டது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.


Next Story