பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்


பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை  ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்
x

பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம் குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.

இந்த உரிமை தொகைகளை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களது கைகளில் உறுதியாக கிடைக்கப்போகிறது என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

இவ்வாறு கிடைக்கும் பணத்தை பலர் உடனே செலவு செய்துவிட்டாலும் சிலர் வங்கிக்கணக்குகளில் இருப்பு வைத்து ஆனந்தப்படுகிறார்கள்.

இது மறைமுகமாக அவர்களிடம் ஒரு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இதுபற்றி கலைஞர் உரிமைத் தொகை பெறும் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

கணவரை எதிர்பார்த்து...

பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு இந்திரா நகரை சேர்ந்த குடும்ப தலைவி குமாரி கனகராஜ்:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி எனக்கு ரூ.ஆயிரம் கிடைத்துள்ளது. இனி மாதந்தோறும் ரூ.ஆயிரம் கிடைக்க போகிறது என நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணம் ஏதோ செலவுக்கு பயன்படுத்த உதவும். எடுக்காமல் வங்கி கணக்கில் இருப்பு வைத்து கொண்டால் தேவைப்படும் போது எடுத்து செலவழித்து கொள்ளலாம். உரிமை தொகையால் நிறைய மகளிர்கள் பயன்பெறுகிறார்கள். தொடர்ந்து பயனடைய உள்ளனர். உரிமை தொகை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு மகளிர் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

பெரம்பலூர் தாலுகா, பொம்மனப்பாடியை சேர்ந்த குடும்ப தலைவி மாரியாயி முத்துசாமி:-

எனக்கு 3 மகன்கள் உள்ளன. நானும், எனது கணவரும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ரூ.ஆயிரம் எனக்கும் கிடைத்துள்ளது. இந்த தொகை மகன்களின் கல்வியில் சின்ன சின்ன செலவுக்கு கை கொடுக்கும். சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்கவும் பயன்படுத்தலாம். சின்ன சின்ன செலவுக்கு கணவரை எதிர்பார்த்து நிற்க வேண்டாம். என்னை போன்று உள்ள மகளிர்களுக்கு இந்த தொகை பெரிதும் உதவும். வங்கி கணக்கில் தொகையை எடுக்காமல் இருப்பு வைத்து கொண்டால் மறைமுக சேமிப்பாக இருக்கும்.

எதிர்காலத்திற்கான சேமிப்பு

வாலாஜாநகரத்தை சேர்ந்த ரேவதி:- மகளிர் உரிமைத்தொகை என்பது உண்மையிலேயே மகளிரின் வாழ்க்கைக்கு பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் செய்யாத உதவியை தமிழக அரசு செய்து வருகிறது. வருமானம் இல்லை என்பதாலேயே பெண்களின் உழைப்புக்கு மரியாதையில்லை என்கிற சிந்தனையை தமிழக அரசின் உரிமைத்தொகை உடைக்கிறது, பொய்ப்பித்து காட்டுகிறது. கிடைக்கும் தொகையானது தனது மகள்களின் எதிர்காலத்திற்கான சேமிப்புத் தொகையாக வளர்ந்து வருகிறது. அவர்களின் கனவுகளை நினைவாக்க இத்தொகை பயன்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் மாதம் ரூ.ஆயிரம் என்பது வருடத்திற்கு ரூ.12 ஆயிரம் வருகிறது. சில நேரங்களில் வீட்டு நிர்வாகம், சமையல், வீட்டை பராமரிப்பதற்கு கூட பயன்படுகிறது. மனதிற்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. சிறுசிறு செலவுகளை கூட யாரையும் எதிர்பார்க்காமல் செலவிட முடிகிறது. இதுவே திராவிட மாடல் அரசின் எடுத்துக்காட்டு என்பது உண்மை. ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு என்று கூறியது எங்களுக்கு குறிப்பாக உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு உள்ளது.

ராஜாஜி நகரை சேர்ந்த இல்லத்தரசி பிரியங்கா:- பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக தான் இந்த உரிமைத்தொகை அரசு மூலம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சிலர் இந்த பணத்தை சிறு, சிறு தேவைகளுக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த பணத்தை முறையாக தங்கநகை சிறுசேமிப்பு திட்டத்திலோ அல்லது அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்திலோ செலுத்தி சேமித்து வந்தால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும். அல்லது வீட்டிற்கு தேவையான சலவை எந்திரம், பிரிட்ஜ் போன்றவற்றை வாங்க பயன்படுத்தலாம். பெண்களிடம் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இருந்தால் அந்த பணம் நிச்சயம் நல்ல வழியில் செலவழிக்கப்படும்.

தா.பழூரை சேர்ந்த கொளஞ்சி:- குடும்பத் தலைவிகளுக்கு கொடுக்கப்படும் மகளிர் உரிமை தொகை திட்டம் வரவேற்கத்தக்கது. தற்போது இந்தத் தொகையை சேமிப்பதற்கான சூழ்நிலை இல்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் உபரியாக கிடைக்கும் இந்த தொகையை ஒரு பகுதி அளவு சேமித்து வைத்து எதிர்கால திட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது உள்ள விலைவாசியில் எவ்வளவு வருமானம் வந்தாலும் நிதிநிலை பற்றாக்குறையாகவே உள்ளது. விரைவில் சரியாகும் என நம்புவோம்.

சேமிப்பை ஊக்குவிக்கும்

இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, அடிப்படை தேவைக்கு மேல் இருப்பவர்கள்தான் சேமிக்கிறார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு செலுத்தும் தொகையை பெற 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை குறைந்தபட்சம் 200 பேருக்கு மேல் வங்கி கிளைகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பணத்தை எடுக்கின்றனர். 10 சதவீதம் பேர் பணத்தை சேமிக்கின்றனர். இது படிப்படியாக மாறி, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story