பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்
பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம் குறித்து இல்லத்தரசிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-
அண்ணாபிறந்த நாளான கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.
இந்த உரிமை தொகையை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களது கைகளில் உறுதியாக கிடைக்கப்போகிறது என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.
இவ்வாறு கிடைக்கும் பணத்தை பலர் உடனே செலவு செய்துவிட்டாலும் சிலர் வங்கிக்கணக்குகளில் இருப்பு வைத்து ஆனந்தப்படுகிறார்கள். இது மறைமுகமாக அவர்களிடம் ஒரு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
இது பற்றி கலைஞர் உரிமைத்தொகை பெறும் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-
விலைவாசி உயர்வு
கடலூர் துறைமுகத்தை சேர்ந்த முருகேஸ்வரி கூறுகையில், கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைத்து விட்டது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் வரவை விட செலவு அதிகமாகி வருகிறது. வீட்டு உபயோக பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். முன்பு வீட்டு செலவுக்கும் கணவரை தான் நாட வேண்டும்.
இப்போது இந்த 1000 ரூபாய் அரசு வழங்குவது மூலம் குடும்ப செலவுகளை நானே கவனித்து கொள்கிறேன். இந்த தொகையை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. படிப்படியாக சேமிப்பேன் என்றார்.
சேமித்து வைப்பேன்
குமராட்சி இருதயபுரத்தை சேர்ந்த இல்லத்தரசி ஆரோக்கியச்செல்வி கூறும் போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாற்றுத்திறனாளி கணவர் இறந்து 4 ஆண்டுகளாக ஆன நிலையில் அன்றாடம் கூலி வேலை செய்து எனது 2 மகன்களை சிரமப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். எனது கணவர் இறந்த பிறகு எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை என்று கவலையில் இருந்தேன். இந்தநிலையில் இந்த கலைஞர் உரிமைத்தொகை எனக்கு கிடைத்தது சந்தோஷமாக உள்ளது. இதை குடும்பச்செலவுக்கு பயன்படுத்தி வருகிறேன். தேவைப்பட்டால் மகன்கள் படிப்பு செலவுக்கு சேமித்து வைப்பேன் என்றார்.
செலவாகி விடுகிறது
காட்டுமன்னார்கோவில் கலைஞர்நகரை சேர்ந்த இல்லத்தரசி மஞ்சுளா கூறுகையில், ' கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வருகிறேன். பணத்தை எடுத்தவுடன் செலவாகி விடுகிறது. இப்போது சேமிக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு பிறகு சேமிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. மொத்தமாக சேமித்து வைத்தால் எனது மகள், மகனுக்கு செலவு செய்து கொள்வேன்' என்றார்.
தொடர்ந்து உதவ வேண்டும்
சேத்தியாத்தோப்பு இல்லத்தரசி எழிலரசி கூறுகையில், ' மகளிர் உரிமைத்தொகை கிடைத்தாலும், தற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டு செலவு அதிகமாகி கொண்டே செல்கிறது. அனைத்து செலவுக்கும் கணவரை எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அரசு வழங்கும் இந்த தொகை உதவிகரமாக உள்ளது. முடிந்த வரை 1000 ரூபாயை சேமிக்க முயற்சி செய்து வருகிறேன். இருப்பினும் திடீரென செலவு வந்தால், அதை தான் எடுத்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எதிர்கால நலன் கருதி, அதை சேமித்து வைப்பேன். இந்த உதவித்தொகையை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. இருப்பினும் இந்த தொகையை விடாமல் தொடர்ந்து தந்து உதவ வேண்டும்' என்றார்.
ரூ.500 சேமிப்பேன்
சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த இல்லத்தரசி சுதா கூறுகையில், ' கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவுடன், அந்த தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்த தொகை கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த 1000 ரூபாய் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. கணவரை எதிர்பார்க்காமல் வீட்டு செலவை சமாளிக்க முடியும். முதல் மாதம் பணம் கிடைத்தவுடன், அதை எடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டேன். ஆனால் இனி மாதந்தோறும் செலவுகளை குறைத்து, மாதம் ரூ.500 சேமிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்' என்றார்.
சேமிப்பை ஊக்குவிக்கும்
இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, 'அடிப்படை தேவைக்கு மேல் இருப்பவர்கள்தான் சேமிக்கிறார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தும் தொகையை பெற 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை குறைந்தபட்சம் 200 பேருக்கு மேல் வங்கி கிளைகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பணத்தை எடுக்கின்றனர். 10 சதவீதம் பேர் பணத்தை சேமிக்கின்றனர். இது படிப்படியாக மாறி, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.