பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்
பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறதா? என கலைஞர் உரிமைத்தொகை பெறும் நாமக்கல் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-
அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது. இந்த உரிமைத்தொகைகளை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களது கைகளில் உறுதியாக கிடைக்கப்போகிறது என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை பலர் உடனே செலவு செய்துவிட்டாலும் சிலர் வங்கிக்கணக்குகளில் இருப்பு வைத்து ஆனந்தப்படுகிறார்கள். இது மறைமுகமாக அவர்களிடம் ஒரு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
இதுபற்றி கலைஞர் உரிமைத்தொகை பெறும் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-
சிறுசேமிப்பு
ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம், நடுத்தெருவை சேர்ந்த அலமேலு கூறியதாவது:-
தமிழக அரசு அளித்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் எனக்கு மருத்துவ செலவிற்கு பெரும் உதவியாக உள்ளது. மருத்துவ செலவு போக மீதமுள்ள பணத்தை சிறுசேமிப்பாக சேமிக்க திட்டமிட்டு உள்ளேன். அந்த சேமிப்பு தொகை நிச்சயமாக தீபாவளி போன்ற திருவிழா கால செலவிற்கு பயன்படும். மாதம்தோறும் வங்கிக் கணக்கிற்கு பணம் வரும் என்பது உறுதியானதால் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணமும் உதித்து உள்ளது. எனவே குடும்பத் தலைவிகளுக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தி தந்துள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பிட்ட தொகை
மோகனூர் அடுத்த மணப்பள்ளியை சேர்ந்த அஞ்சிதம்:-
மகளிருக்கான உரிமை தொகை திட்டப் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி செல்போனிற்கு வந்தவுடனே மனதில் ஒரு தைரியம் வந்துவிட்டது. அதன் மூலம் சிறிய செலவுகளை கூட கண்டு அஞ்சுவதில் இருந்து விடுதலை கிடைத்து உள்ளது. மாதந்தோறும் எங்கள் கையிலும் ஆயிரம் ரூபாய் நிரந்தரமாகி உள்ளதால், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு கூட குடும்பத் தலைவிகள், கணவர்மார்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும் மாதம்தோறும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும். பொதுவாக சேமிப்பு என்றாலே வங்கிகளை நாடும் நிலை உள்ளது. இந்த மகளிர் உரிமைத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுவதால், அதை எடுக்காமலேயே சேமித்து வைக்கவும் மனம் யோசிக்கிறது. தற்போது முழுமையாக அதை செலவுக்காக எடுத்தாலும், எதிர்காலத்தில் அதை சேமிக்கவே திட்டமிட்டுள்ளேன்.
திட்டமிட்டுள்ளேன்
பரமத்திவேலூர் அடுத்த நல்லியாம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி:-
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் இந்த திட்டத்தில் பயனடைகின்றனர். அன்றாடம் உழைப்பவர்கள் பெரும்பாலும் குருவி சேர்ப்பது போல சிறு, சிறு தொகையாகவே சேமிப்பார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும், செலவு அதற்கு ஏற்ப வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் மட்டுமே வரும். அத்தகைய எண்ணத்தை முதல்-அமைச்சர், இந்த திட்டம் மூலமாக ஏழை குடும்ப தலைவிகளின் மனதில் ஏற்படுத்தி உள்ளார். எனவே அரசு வங்கிக் கணக்கில் செலுத்தும் ரூபாய் ஆயிரத்தை எடுக்காமல் இருந்தால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் சேமிக்க முடியும். எனவே செலவுகளை வழக்கம்போல், கையாண்டு சேமிப்பை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.
நிச்சயமாக சேமிப்பேன்
எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த பவித்ரா:-
எனக்கு தற்போது கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் கிடைத்து உள்ளது. சிறுவயதில் இருந்தே எனக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மாதம்தோறும் கிடைக்கும் இந்த உரிமைத்தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடிவு செய்துள்ளேன். மேலும் குழந்தைகளின் கல்விக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே உரிமைத்தொகையை முழுமையாக சேமிக்கவில்லை என்றாலும், 50 சதவீதத்தை நிச்சயமாக சேமிப்பேன். இது குடும்பத் தலைவிகளுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேமிப்பை ஊக்குவிக்கும்
இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, 'அடிப்படை தேவைக்கு மேல் இருப்பவர்கள்தான் சேமிக்கிறார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தும் தொகையை பெற 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை குறைந்தபட்சம் 200 பேருக்கு மேல் வங்கி கிளைகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பணத்தை எடுக்கின்றனர். 10 சதவீதம் பேர் பணத்தை சேமிக்கின்றனர். இதுப் படிப்படியாக மாறி, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.