சாமி சிலைகளுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு


தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

குமரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட சாமி சிலைகளுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் பங்கேற்றார்.

கன்னியாகுமரி

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் நேற்றுமுன்தினம் பத்மநாபபுரம் அரண்மனை முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் சாமி சிலைகள் வழியனுப்பி வைக்கப்பட்டது. அப்போது யானை மீது அமர்ந்தபடி சரஸ்வதி அம்மனும், பல்லக்கில் எழுந்தருளியபடி குமாரகோவில் முருகப்பெருமானும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவில் சாமி சிலைகள் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் தங்கியது.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு அங்கிருந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு குமரி-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் தமிழக இந்து அறநிலையத் துறையினர், கேரள இந்து அறநிலையத்துறையினரிடம் சாமி சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் மன்னரின் உடைவாளை பெற்றுக் கொண்டு அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதில் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் ஹரிந்திரன், வின்சென்ட், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் சாமி சிலைகள் ஊர்வலம் கேரள மாநிலத்திற்குள் நுழைந்து இரவில் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்கியது. மீண்டும் இன்று (சனிக்கிழமை) காலையில் சாமி சிலை ஊர்வலம் இங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நவராத்திரி திருவிழா பூஜையில் சாமி சிலைகள் பங்கேற்கிறது. அதாவது, சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கேட்டைக்ககத்தில் உள்ள நவராத்திரி கொலுமண்டபத்திலும், ஆரியசாலை சிவன் கோவிலில் முருகப்பெருமானும், செந்திட்டை அம்மன் கோவிலில் முன்னுதித்த நங்கை அம்மன் சிலையும் பூஜைக்காக வைக்கப்படுகிறது.

9 நாட்கள் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு மீண்டும் சாமி சிலைகள் 26-ந் தேதி அங்கிருந்து குமரி மாவட்டத்துக்கு புறப்படும்.


Next Story