வீட்டை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சலை தடுக்க வீட்டை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வள்ளியூர் (வடக்கு):
கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.
நாங்குநேரி யூனியன் ராஜாக்கள்மங்களம் பஞ்சாயத்து சிறுமளஞ்சியில் நடந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் வெற்றிவேல் செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்றார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். உரையினை அனைவரும் பார்வையிட்டு கேட்டறிந்தனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்து பொதுமக்கள் மத்தியில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
டெங்கு பாதிப்பு
கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
இக்கிராமத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை வெள்ளத்தினால் கிராமங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் வசிப்பிடம் சுற்றி மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் உருவாகும். டெங்கு கொசுவினால் ஏற்படும் பாதிப்பை பற்றி பொதுமக்கள் அறிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து கிராமங்களுக்கு தேவையான பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். நிதிகளை முறையாக பயன்படுத்தினால் தான் அடுத்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் முறையாக பதிவு செய்து தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். விடுபட்டிருந்தால் ஊராட்சி அலுவலகங்களை அணுகி தகுந்த ஆவணங்களுடன் தங்களின் பெயர்களை பதிவு செய்து வீடு கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.
கண்காட்சி
முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், வேளாண்மை கண்காட்சி போன்ற கண்காட்சியையும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் பையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கிராம பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் அனிதா, உதவி திட்ட அலுவலர் சுமதி, உதவி இயக்குனர் (வேளாண்மை) முருகானந்தம், குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாக பொறியாளர் டேனியல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீகாந்த், யமுனா, நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.