கருப்பாநதி அணையில் நீர் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்; கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் மனு


கருப்பாநதி அணையில் நீர் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்; கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் மனு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கருப்பாநதி அணையில் நீர் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் மனு கொடுத்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியில் 1973 முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், 2003-ல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் முதல் 70 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் போதிய மழை பெய்து வந்தபோது இரண்டு திட்டங்களின் மூலமும் சரியான அளவு குடிநீர் கிடைத்து வந்த நிலையில் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினை ஏற்படவில்லை. தற்போது பருவமழை பொய்த்து, வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் திட்டங்கள் மூலம் போதிய நீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கருப்பாநதி அணையில் 45.77 அடி நீர்மட்டமே உள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம், நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில், கடையநல்லூர் நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான கருப்பாநதி அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. எனவே, நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அணையில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடையநல்லூரில் வெறிநாய் கடியால் இறந்த லட்சுமிக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், யாசர் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story