ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
நாகர்கோவிலில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க குமரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 60 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட பிஸ்கட் தினமும் காலை, மாலையில் 2 வீதம் தொடர்ந்து 25 நாட்களுக்கு வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1,304 குழந்தைகள்
மேலும் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 30 கிராம் எடையுள்ள 2 செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வீதம் 25 நாட்களுக்கு 750 கிராம் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள 799 குழந்தைகளுக்கும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள 505 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1,304 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்கின்ற வகையில் உணவுகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டார குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.