என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு: ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. தரவரிசை பட்டியல் 26-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியாகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு ஆன்லைன் வாயிலாக நடந்து முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இது கடந்த ஆண்டு விண்ணப்ப பதிவை காட்டிலும் சற்று அதிகம் என்று கலந்தாய்வை நடத்திவரும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்தது. விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 6-ந் தேதி வெளியிடப்பட்டது.
தரவரிசை பட்டியல்
இதற்கிடையில் கடந்த 5-ந் தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு மேற்கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது. ஆன்லைன் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 5-ந் தேதி தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) விண்ணப்பித்தவர்களில் தகுதியான மாணவ-மாணவிகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னர், 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கலந்தாய்வு
அதையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவு ஆகிய சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு முதலில் கலந்தாய்வு நடக்கிறது.
அதன்படி, அவர்களுக்கு 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையில் கலந்தாய்வு நடக்க உள்ளது. அதன் தொடர்ச்சியாக 7-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.