என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 2-ந் தேதி தொடங்கும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 2-ந் தேதி தொடங்கும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
x

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 2-ந் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை,

இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. பாலிடெக்னிக் தொழில்நுட்ப பட்டய படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை உயர் கல்வித்துறை எடுத்து இருக்கிறது. மேலும், பகுதி நேர பாலிடெக்னிக் படிப்பில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இணையதளம் மூலமாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1 லட்சத்து 62 ஆயிரம் இடங்கள் உள்ளன.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

என்ஜினீயரிங் கல்லூரி கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந் தேதி தொடங்கும் என அறிவித்து இருந்தோம். தற்போது உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகளுடன் கலந்து பேசினோம். மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய தேதிக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அதன்படி, வரும் ஜூலை 2-ந் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூலை 7-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந் தேதி வரை நடைபெறும். துணை கலந்தாய்வு ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கும். செப்டம்பர் 3-ந் தேதி முதல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நடைபெறும்.

கலை கல்லூரிகள்

அரசு கலை கல்லூரிகளில் கல்வி இடங்கள் கடந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து இருந்தன. இந்த ஆண்டும் தேவை ஏற்பட்டால் கூடுதல் இடங்களை உயர்த்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம். தற்போது வரை 2.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அட்டவணை

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்க இருக்கிறது.

முதல் சுற்று கலந்தாய்வு வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரையிலும், 2-வது சுற்று 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், 3-வது சுற்று ஜூலை 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரையிலும், 4-வது சுற்று ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு சுற்றிலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு, ஒதுக்கீட்டை இறுதி செய்தல், ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதனை உறுதி செய்து கல்லூரிகளில் சேருதல் போன்றவற்றிற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


Next Story