431 கல்லூரிகளில் சேருவதற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு
431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 200-க்கு 200 ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை 133 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர்.
சென்னை,
2022-23-ம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் இருக்கும் 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் உள்ள 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்த நிலையில், இதற்கு மொத்தமாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் பதிவு கட்டணம் உள்பட முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவர்கள், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 80 பேர் ஆகும். இதில் 10 ஆயிரத்து 923 பேரின் விண்ணப்பங்களில் தவறுகள் இருந்ததால் அவை நிராகரிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 95 ஆயிரத்து 397 மாணவர்கள், 62 ஆயிரத்து 750 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் அடங்குவார்கள். மேலும், இவர்களில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படி படித்தவர்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 582 பேர், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 19 ஆயிரத்து 370 பேர், மற்றவர்கள் பிற பாடத்திட்டத்தை படித்தவர்கள். இதுதவிர, தகுதி உள்ள விண்ணப்பதாரர்களில் 43 ஆயிரத்து 247 பேர் தமிழ் பயிற்றுமொழி வகையை சேர்ந்தவர்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 864 பேர் ஆங்கில பயிற்று மொழி வகையை சேர்ந்தவர்கள், மற்ற 46 பேர் இதர பயிற்று மொழிவகையை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
தரவரிசை பட்டியல் வெளியீடு
இவர்களுக்கான தரவரிசை பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
அப்போது உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் லட்சுமி பிரியா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர். மாணவர்கள் தரவரிசை பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
133 பேர்
தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 'கட்-ஆப்' மதிப்பெண்ணை 133 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். அந்தவகையில் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர்களின் விவரம் வருமாறு:-
1) கே.ரெஞ்சிதா (கொல்லம்), 2) எம்.ஹரினிகா (தர்மபுரி), 3) எம்.லோகேஷ் கண்ணன் (திருவள்ளூர்), 4) எச்.அஜய் (கோவை), 5) ஜி.கோபி (புதுக்கோட்டை), 6) டி.பிரதீக்ஷா (கோவை), 7) பி.பவித்ரா (சென்னை), 8) ஜெ.ஹரிகுரு (நாமக்கல்), 9) எம்.மதுபாலிகா (செங்கல்பட்டு), 10) கே.ஷாருகேஷ் (மதுரை)
இதுதவிர 199 முதல் 200 'கட்-ஆப்' மதிப்பெண்ணுக்குள் 468 பேரும், 195 முதல் 199 'கட்-ஆப்' மதிப்பெண்ணுக்குள் 3 ஆயிரத்து 23 பேரும் இடம் பெற்று இருக்கின்றனர்.
ரேண்டம் எண் இல்லை
பொதுவாக தரவரிசை பட்டியல் வெளியிடும்போது, ஒரே மாதிரியான மதிப்பெண் வரும் நேரத்தில், சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை வரவில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கலந்தாய்வு எப்போது?
இதனைத்தொடர்ந்து, விண்ணப்பப்பதிவு செய்தவர்களின் பெயர் விடுபட்டு இருந்தால் அது பற்றி தெரிந்து கொள்ளவோ, தேவைப்படுபவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யவோ வருகிற 19-ந் தேதி வரை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மையத்தை (டி.எப்.சி.) அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 20-ந் தேதி (சனிக்கிழமை) முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் 22 ஆயிரத்து 587 பேர் பங்கேற்க இருக்கின்றனர். வருகிற 25-ந் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது.
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற அழைப்பு மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.