லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர்-பெண் உடல் நசுங்கி பலி
லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் மற்றும் உடன் சென்ற பெண் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவேற்காடு,
மதுரையை சேர்ந்தவர் நாகராஜ். இவர், மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கோபிகிருஷ்ணன் (வயது 27). இவர், என்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னை திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கோபிகிருஷ்ணன் நேற்று மதியம் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்றார். திருவேற்காடு அடுத்த வெற்றிலைதோட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி, கோபிகிருஷ்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய கோபிகிருஷ்ணன் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த பெண் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
'லிப்ட்' கேட்டு வந்தாரா?
மேலும் விசாரணையில் விபத்தில் பலியான பெண், வண்டலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி (45) என்பது தெரிந்தது. ஆனால் அவர், கோபி கிருஷ்ணனிடம் 'லிப்ட்' கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தாரா? அல்லது அவருக்கு தெரிந்தவரா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாரி சக்கரத்தில் சிக்கியதில் 2 பேரின் உடலும் நசுங்கியதில் உடல் பாகங்கள், தசைகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பிறகு, அங்கு சிதறி கிடந்த உடல் பாகங்களை காகங்கள் கொத்தி தின்ற காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திருவேற்காடு,
லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் மற்றும் உடன் சென்ற பெண் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.