அகோரியாக மாறிய வடமதுரை என்ஜினீயர் மரணம்


அகோரியாக மாறிய வடமதுரை என்ஜினீயர் மரணம்
x

ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு அகோரியாக மாறிய வடமதுரை என்ஜினீயர் மரணம் அடைந்தார்.

திண்டுக்கல்

ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு அகோரியாக மாறிய வடமதுரை என்ஜினீயர் மரணம் அடைந்தார்.

அகோரியாக மாறிய என்ஜினீயர்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்த தனசேகர்-செல்லம்மாள் தம்பதியின் மகன் ரவிசங்கர் என்ற கண்ணன் (வயது 31). தற்போது இவர், வடமதுரை திருச்சி மெயின் ரோடு பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

வடமதுரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த இவர், சென்னையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்தார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மாலை அணிந்து சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு சென்றார்.

அதன்பிறகு அவர் ஓலைச்சுவடிகள், ஆன்மிக புத்தகங்களை அதிக அளவில் படித்தார். இதன் மூலம் அவருக்கு ஆன்மிகத்தின் மீது தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ள 12 ஜோதி லிங்கங்களை பாதயாத்திரையாக சென்று கண்ணன் தரிசித்தார். இதைத்தொடர்ந்து இமயமலை, காசிக்கு சென்று அகோரியாக தீட்சை பெற்றார்.

உடல் அடக்கம்

அகோரியாக மாறிய பிறகு வடமதுரைக்கு வந்த கண்ணன், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினார். மேலும் ஞான உபதேசமும் செய்து வந்தார். கடந்த 90 நாட்களாக உணவு அருந்தாமல் தீவிர விரதத்தில் கண்ணன் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், வீட்டில் இருந்தபோது திடீரென அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் எலப்பார்பட்டி பகுதியில் அகோரி முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

அதன்படி பத்மாசன முறையில் அவரது உடலை வைத்து, அதன்மீது உப்பு, விபூதி, சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பொருட்களை போட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில் அகோரிகள், சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 48 நாட்களுக்கு பிறகு அவரை அடக்கம் செய்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story