இறைச்சி கடையில் கோழிகளை திருடிய என்ஜினீயர் கைது


இறைச்சி கடையில் கோழிகளை திருடிய என்ஜினீயர் கைது
x

பெரம்பலூர் போலீஸ் நிலையம் பின்புறமுள்ள இறைச்சி கடையில் கோழிகளை திருடிய என்ஜினீயரை கைது செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள அவரது தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

240 கோழிகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, கரியமாணிக்கம் கடை வீதி தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 46). இவர் தற்போது பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எம்.ஆர். நகரில் வசித்து வருவதோடு, பெரம்பலூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மார்க்கெட் தெருவில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ந்தேதி அதிகாலையில் கோழி பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்து இவரது கடைக்கு வெளியே விற்பனைக்காக இறக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 20 பெட்டிகளில் இருந்த மொத்தம் 240 கோழிகள் பெட்டிகளுடன் திருட்டு போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராம்குமார் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

என்ஜினீயர் கைது-சரக்கு வாகனம் பறிமுதல்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் 2 பேர் சரக்கு வாகனத்தில் வந்து கோழிகளை பெட்டிகளுடன் திருடி சென்றது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை பார்வையிட்டு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோழிகளை பெட்டிகளுடன் சரக்கு வாகனத்தில் திருடி சென்றது வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த வேலுசாமியின் மகன் பாலமுருகன் (33), அவரது தம்பி வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலமுருகனை நேற்று கைது செய்தனர். திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாகியுள்ள வேல்முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான பாலமுருகன் என்ஜினீயர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story