திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சமடைந்தார்.


திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சமடைந்தார்.
x

திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

திருச்சி

காதல்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகள் தமிழ்ப்பொன்னி (வயது 21). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் அரியலூர் கோவிந்தன்புத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் முகமது யூசுப்(20) படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் ஏற்கனவே தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தபோது, அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வருகின்றனர். இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் தமிழ்ப்பொன்னி வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ்ப்பொன்னிக்கு வேறு ஒருவருடன் கடந்த 12-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற 27-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

போலீசில் புகார்

இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத தமிழ்ப்பொன்னி கடந்த 14-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர்கள், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முகமது யூசுப் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்ப்பொன்னி மற்றும் முகமது யூசுப் ஆகியோர் நேற்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. நாங்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி திருமண வயதை முகமது யூசுப் எட்டும்வரை எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ்ப்பொன்னி மீண்டும் தன்னுடைய ஊருக்கு திரும்பி சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரால் அங்கு செல்ல முடியாது. எனவே நாங்கள் தொடர்ந்து படிக்க ஏதுவாக காப்பகத்தில் தங்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story