அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன். இவர் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது தூத்துக்குடி கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது, அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.வில் சேர்ந்து, மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.
சொத்துக்கள் முடக்கம்
பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.டி.அசோக்குமார் ஆஜராகி கூறியதாவது:-
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டம் கடந்த 2005-ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில், லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கலாம் என்று கடந்த 2009-ம் ஆண்டுதான் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மனுதாரர் மீது பதிவான இந்த சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுக்குள்ளானவை.
தடை விதிப்பு
அப்போது, இந்த காலக்கட்டத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், லஞ்ச வழக்கை விசாரிக்கலாம் என்ற திருத்தம் கொண்டு வரப்படவில்லை. எனவே, இந்த சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததே தவறு. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற ஜூலை 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.