தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும்


தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும்
x

தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.

புதிய ஆணையர் பொறுப்பேற்பு

தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார் கரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி தஞ்சை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்றுகாலை தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன். மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனக்கு முன்பு இருந்த ஆணையர் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வரி வசூலில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தஞ்சை மாநகராட்சி 18-வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் முதல் இடத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குரூப்-2 தேர்வில் வெற்றி

திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார். அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக கடந்த 2014-ம் ஆண்டு விருது பெற்றார்.

அதன்பின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காகவும் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் செயலாளராக பணியாற்றிய இவர், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, தற்போது தஞ்சைக்கு மாறுதலாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story