நசியனூரில், மாற்று இடம் தராமல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் முன் படுத்துக்கொண்டதால் பரபரப்பு
நசியனூரில், மாற்று இடம் தராமல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இடிக்க வந்த பொக்லைன் எந்திரம் முன்பு ஒருவர் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி
நசியனூரில், மாற்று இடம் தராமல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இடிக்க வந்த பொக்லைன் எந்திரம் முன்பு ஒருவர் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
ஈரோடு மாவட்டம் நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வந்தார்கள்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும் வீடுகளை அகற்றிக்கொள்ள 6 மாத கால அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனால் 6 மாதம் கடந்த பின்னரும் வீடுகளை அகற்றவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி வருவாய்த்துறை மற்றும் நில அளவையாளர்கள் அளவீடு செய்து வீடுகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
குண்டு கட்டாக கைது
இந்தநிலையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் வருவாய்த் துறையினர் 15 பேருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வீடுகளை அகற்ற விடாமல் பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் பொக்லைன் எந்திரத்தின் சக்கரம் முன்பே படுத்துக்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இந்த சம்பவம் நசினூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.