டாஸ்மாக் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தாத ஊழியர்கள் பணி இடைநீக்கம்
திருவொற்றியூர், ராமாபுரம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளின் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தாத ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் கீழ் திருவொற்றியூர், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், பூந்தமல்லி, திருவேற்காடு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 183 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திருவொற்றியூர் மற்றும் ராமாபுரம் என 2 டாஸ்மாக் கடைகளில் வசூல் பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் வங்கி கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 ஊழியர்களையும் டாஸ்மாக் நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது.
இதனை அறிந்த மற்ற டாஸ்மாக் கடை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கடைகளை திறக்காமல் நேரடியாக செம்பரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கிற்கு வந்து டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கியில் சர்வர் பழுதால் பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், இதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள், 2 ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை திரும்ப பெறுவதாக கூறினர். அதைஏற்று போராட்டத்தை கைவிட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் அப்பகுதிகளில் நேற்று வழக்கமாக 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டன.