ஊழியர்களை இயன்றவரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்... நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட தனியார் நிறுவனங்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் தற்போது 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. 'மிக்ஜம்' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஊழியர்களை இயன்றவரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தனியார் நிறுவனங்களை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்."
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.